செய்திகள்
தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்.

தூத்துக்குடியில் பலகோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் அரசு ஊழியர் கைது

Published On 2018-08-03 06:04 GMT   |   Update On 2018-08-03 06:04 GMT
தூத்துக்குடியில் பலகோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் அரசு ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

தூத்துக்குடி:

தொழில் வர்த்தக நகரமான தூத்துக்குடியில் சமீபகாலமாக போதை பொருட்கள் அதிகளவில் புழங்கி வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து தூத்துக்குடி பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் தூத்துக்குடி காந்திநகரில் ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பண்டல் பண்டலாக போதை பொருட்கள் கிடந்தன.

அவற்றை வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி அரிராம்நகரை சேர்ந்த கார்த்திகேயன்(48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான கார்த்திகேயன் தூத்துக்குடி வேளாண் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ளார். இந்த வழக்கில் ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் மில்லர்புரத்தை சேர்ந்த வில்சன்(39) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் வழியாக தூத்துக்குடிக்கு கடத்திவரப்பட்ட இந்த போதைப் பொருட்களை பதுக்கி வைத்து, பிறகு கடல் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேட்டுப்பட்டியை சேர்ந்த துறைமுக ஊழியர் அப்துல்காதர் ஜெய்லானி என்பவரை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் இருந்து 400 பண்டல் வெளிநாட்டு சிகரெட்டுகள், வெளிநாட்டு மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல தூத்துக்குடி மணல் தெருவில் ஜெரீஷ் என்பவரது வீட்டில் பதுக்கிவைத்திருந்த எண்ணெய் வடிவிலான ஹசீஸ் என்ற போதைப் பொருள், பசை (பேஸ்ட்) வடிவிலான ‘சரஸ்’ என்ற போதைப் பொருள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜெரீஷ்டனை கைது செய்தனர்.

தற்போது போலீசாரிடம் சிக்கியதும் சரஸ் வகையிலான போதைபொருள் என்பது குறிப்பிடத்தக்கது. பல கோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் அரசு ஊழியர் கைதான சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News