செய்திகள்

பட்ஜெட் மசோதா நிறைவேற்ற 31-ந் தேதி வரைதான் அனுமதி - கிரண்பேடி

Published On 2018-07-29 11:42 GMT   |   Update On 2018-07-29 11:42 GMT
பட்ஜெட் நிதி மசோதா பெறுவதற்கு வருகிற 31-ந் தேதி வரைதான் அனுமதி அளித்திருப்பதாக கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #PuducherryBudget #GovernorKiranBedi
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி பதவியேற்றது முதல் வார இறுதி நாட்களில் நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி இன்று 178-வது வார ஆய்வினை மேற்கொண்டார். புதுவை புல்வார் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் தூய்மை நிலை மற்றும் பேனர்கள் தொடர்பாக சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின் நிருபர்களிடம் கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:-

வருகிற 31-ந் தேதிக்குள் நிதி மசோதாவுக்கு சட்டசபையில் அனுமதி பெறும்படி கூறியுள்ளேன். அதன்படி நாளையே சட்டமன்றத்தை கூட்டி நிதி மசோதாவுக்கு அனுமதி பெற்று என்னுடைய ஒப்புதலுக்கு அனுப்பினால் சற்றும் தாமதிக்காமல் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வேன்.

3 நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து தான் பேரவை நிகழ்வுகளை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டத்தை உருவாக்குபவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். சட்டப்பேரவை என்பது சட்டத்தை உருவாக்கும் இடம். சட்டத்தை உருவாக்குபவர்களே எப்படி சட்டத்திற்கு இணங்கி நடக்காமல் இருப்பார்கள்?

இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி பொதுப் பணித்துறை அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் ஓட்டலுக்கு வரவழைத்தார். அங்கு புல் தரையில் அமர்ந்து தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் அதற்கு முன்பாக வாய்க்கால்களை தூர்வாரி மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். #PuducherryAssembly #PuducherryBudget #GovernorKiranBedi
Tags:    

Similar News