செய்திகள்

ஆடி மாத பவுர்ணமி - திருச்செங்கோட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

Published On 2018-07-28 10:39 GMT   |   Update On 2018-07-28 10:39 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலை சுற்றி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். #temple

திருச்செங்கோடு:

ஆடி மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.24 மணிமுதல் இன்று அதிகாலை 2.23 மணிவரை பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலை சுற்றி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவில் அடிவார படிகட்டில் விளக்கேற்றி பூஜை செய்த பக்தர்கள் அதன்பிறகு கிரிவலம் மேற்கொண்டனர்.

சுமார் 7 கி.மீட்டர் தூரம் சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் பக்தர்கள் குடும்பத்துடன் கிரிவலம் சென்றனர். மாலை கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நேரம் ஆகஆக பக்தர்கள் கூட்டம் அதிகமானது.

இதனால் திருச்செங்கோடு நகரில் கிரிவலம் செல்லும் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாது சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

ஆடிமாத பவுர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் திருச்செங்கோட்டில் திரண்டனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளதால் கிரிவல நாட்களில் திருச்செங்கோட்டிற்கு சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதிகளில் இருந்து கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #temple

Tags:    

Similar News