செய்திகள்

சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு - திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூ. நாளை ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-25 10:58 GMT   |   Update On 2018-07-25 10:58 GMT
மக்களை வாட்டி வதைக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாளை திருவாரூர் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்திய கம்யூனிஸ்டு அறிவித்துள்ளது.
மன்னார்குடி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழகம் முழுவதும் குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவீதமும், வாடகைக்கு விடப்படும் குடியிருப்புகள் மற்றும் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு விடப்படும் கட்டிடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதமும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது ஏழை, எளிய, நடுத்தர மக்களையும், சிறு, குறு, நடுத்தர வணிகர்களையும் பாதிக்கக்கூடிய செயலாகும்,

கடந்த 9-ந் தேதி வரை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் வீட்டு வரி உயர்வு குறித்து எந்தவிதமான முன் அறிவிப்பும் வெளியிடப்படாமல் திடீரென இந்த வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் 2 ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி போயுள்ளது, இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் கருத்து கூறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் நிர்வாக உத்தரவில் வீட்டு வரி உயர்த்தியுள்ளது ஜனநாயக விரோதச் செயலாகும்.

இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் கருத்து கேட்க போவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது, இந்த வீட்டுவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

எனவே மக்களை மேலும் வாட்டி வதைக்கும் இந்த வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாளை (26-ந் தேதி) திருவாரூர் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News