செய்திகள்

புதுவை அரசு ஆஸ்பத்திரி செயல் இழந்து கிடக்கிறது: பாரதீய ஜனதா புகார்

Published On 2018-07-25 10:46 GMT   |   Update On 2018-07-25 10:46 GMT
புதுவை அரசு பொது மருத்துவமனை சிறப்பான முறையில் இயங்கிய காலம்போய், தற்போது அதன் சிறப்பை இழந்து செயல்பட்டு வருகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

புதுச்சேரி:

பாரதீய ஜனதா துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு பொது மருத்துவமனை சிறப்பான முறையில் இயங்கிய காலம்போய், தற்போது அதன் சிறப்பை இழந்து செயல்பட்டு வருகின்றது. மாநில வித்தியாசம் பார்க்காமல் மனிதநேயத்தை மட்டும் பார்த்து செயல்பட்டுவரும் அரசு பொதுமருத்துவமனை தற்போது நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்து மாத்திரைகளைக்கூட வழங்க இயலாத நிலையில் உள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது.

குறிப்பாக அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் இருதய நோய் சிகிச்சை பிரிவில் புதுவை அரசு மற்றும் டாக்டர் செரியன் மருத்துவமனையும் இணைந்து ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டாக்டர் செரியன் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நமது பொது மருத்துவ மனையில் பணிபுரியும் இருதய நோய் சிகிச்சை நிபுனர்களான டாக்டர்.ஆனந்தராஜ், டாக்டர் மணிமாறன் ஆகியோர் இணைந்து இதுவரை 184 இருதய நோயாளிகளுக்கு நமது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றது.

ஆனால், கடந்த 6 மாதமாக இந்த இருதய அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ள தாக தெரிகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளுக்கு ஒப்பந்தத்தின்படி புதுவை அரசு டாக்டர் செரியன் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தொகை செலுத்தப்படாமல் உள்ளதாக தெரிகிறது.

புதுவை நிதி நெருக்கடியில் இருந்தாலும் மனித உயிர்கள் சம்மந்தப்பட்ட இதுபோன்ற வி‌ஷயங்களில் அரசு மெத்தனமாக செயல்படாமல் சம்மந்தப்பட்ட மருத்துவ மனைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி மீண்டும் நமது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

பொது மருத்துவமனை யில் செயல்பட்டு வந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பழுதடைந்த காலம் முதல் அரசு பொது மருத்துவ மனைக்கு வரும் நோயாளி களுக்கு அவுட்சோர்சிங் முறையில் அதுவும் மிகவும் குறைந்தபட்ச அளவிலான நோயாளிகளுக்கு தனியாரிடம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

உலகில் இந்த துறையில் சிறந்து விளங்குகின்ற பல்வேறு தனியார் நிறுவனங்கள் நமது அரசுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் இந்த சேவையை செய்ய முன்வருகின்றன. அவற்றில் சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்து இதனை விரைந்து நிறுவுவதற்கு அரசு போர்க்கால் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான மக்களின் உயிர்க்காக்கும் சுகாதாரத்துறையே தற்போது சுகவீனமாக உள்ளது. கவர்னர் இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட புதுவை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News