செய்திகள்

ரூ.400 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டுகள் ஜெயில்

Published On 2018-07-25 10:10 GMT   |   Update On 2018-07-25 10:10 GMT
வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ரூ.400 லஞ்சம் வாங்கிய 2 பேருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்:

வாணியம்பாடி தாலுகா மதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னபையன். இவருக்கு அதேபகுதியில் விவசாய நிலம் இருந்தது. அந்த நிலத்திற்கு மின் இணைப்பு பெற முடிவு செய்தார். இதற்காக அவருக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ரமேஷ்பாபு என்பவர் அவரது மனுவை விசாரித்து வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தந்தால் சான்றிதழ் தருவதாக கூறி உள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னபையன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் சின்னபையனிடம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, அலுவலக உதவியாளர் சேகர் என்பவர் மூலம் ரூ.400-ஐ லஞ்சமாக வாங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரமேஷ்பாபு, சேகர் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.

நேற்று முன்தினம் வழக்கில் நீதிபதி பாரி தீர்ப்பு கூறினார். அதில், லஞ்சம் வாங்கிய ரமேஷ்பாபு மற்றும் சேகர் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதாக கூறியிருந்தார். #tamilnews
Tags:    

Similar News