செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு

Published On 2018-07-23 07:27 GMT   |   Update On 2018-07-23 07:27 GMT
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளி நேரத்தை தவிர கூடுதல் நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். #Metricschools #Plus1 #Plus2

கோவை:

தமிழகத்தில் சில மெட்ரிக் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

பள்ளி நேரத்துக்கு முன்பாக காலை நேரத்திலும் வகுப்பு முடிந்த பிறகு மாலையிலும் சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் 12 மணி நேரம் வரை பள்ளிகளிலேயே இருப்பதாகவும், எனவே அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு ஏராளமான புகார்கள் சென்றது. சில பெற்றோர்கள் அனுப்பியிருந்த அந்த புகார்களில் சிறப்பு வகுப்பு என்கிற பெயரில் வகுப்பு நேரங்களை விட கூடுதலாக மாணவ, மாணவிகளை வகுப்பறையிலேயே வைத்து பாடம் எடுக்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் மனரீதியாக பாதிக்கப்படுவதை தடுக்க சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என உத்தரவிடுமாறு கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் பள்ளி நேரத்திலேயே பாடங்களை எடுத்து முடித்து விட வேண்டும். கூடுதல் நேரங்களில் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டாம்.

மதிப்பெண் குறைவாக எடுக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

தற்போது தனியார் பள்ளிகள் கூட தேர்வு முடிவுகளை கூட விளம்பரப்படுத்துவது கிடையாது. எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி தான் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

அதுவும் போதிய இடைவெளிகள் விட்டு தான் நடத்தப்படுகிறது. சிறப்பு வகுப்புகள் நடத்தாவிட்டால் அது வருட கடைசி நேரத்தில் மாணவர்களுக்கு தான் கூடுதல் சுமையாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக வந்த புகார்களின் பெயரில் ஏற்கனவே சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை பின்பற்ற வேண்டும் என அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Metricschools #Plus1 #Plus2

Tags:    

Similar News