செய்திகள்

வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து போலி கையெழுத்து மூலம் ரூ.11 லட்சம் மோசடி

Published On 2018-07-11 08:11 GMT   |   Update On 2018-07-11 08:11 GMT
தா.பேட்டை அருகே வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த தும்பலம் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையில் தும்பலம் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து அவர்களுக்கு தெரியாமலே லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்தது.

வங்கியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் கருணாநிதி (34) என்பவர் தும்பலத்தை சேர்ந்த சித்ரா கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 35 ஆயிரமும், மணி கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரமும், சூரம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் கணக்கிலிருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், சண்முகம் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரமும், சிட்டிலரை சரவணன் கணக்கிலிருந்து ரூ.95 ஆயிரம், அரவன் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் உள்பட பலரது கணக்கிலிருந்து போலியாக கையெழுத்தை போட்டு பணத்தை எடுத்துள்ளார்.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் வங்கியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் வாடிக்கையாளர்களது வங்கி கணக்குளை ஆய்வு செய்து மோசடி செய்து எடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக திரும்பி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் வங்கி கிளை மேலாளர் சமயசங்கரி முசிறி போலீசில் அளித்த புகாரில் வங்கியில் தினக்கூலியாக வேலை பார்க்கும் கருணாநிதி வாடிக்கையாளர்களை போன்று கையெழுத்து போட்டு போலி ஆவணம் பயன்படுத்தி ரூ.11 லட்சம் வரை மோசடி செய்து எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் வழக்கு பதிந்து கருணாநிதியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். tamilnews
Tags:    

Similar News