செய்திகள்

தினமும் 20 ஆயிரம் லோடு மணல் கிடைத்தால்தான் விலை குறையும் - மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் தகவல்

Published On 2018-07-04 10:33 GMT   |   Update On 2018-07-04 10:33 GMT
1 நாளைக்கு 20 ஆயிரம் லோடு தந்தால்தான் மணல் விலை குறையும் என்று தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 7 மாதமாக மணல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அரசால் 2 ஆயிரம் லோடுக்கு மேல் மணல் கொடுக்க முடியவில்லை.

கடந்த மே-ஜூன் மாதங்களில் 1 நாளைக்கு 11 ஆயிரம் லோடு மணல் தந்தனர். சேகர்ரெட்டி கைதுக்கு முன்பு 1 நாளைக்கு 30 ஆயிரம் லோடு மணல் வந்தது.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆன பிறகு அரசே மணல் விற்பனை செய்யும் என்றார். அதன்படி ஜூன், ஜூலை மாதங்களில் 28 குவாரிகள் மூலம் 11 ஆயிரம் லோடு மணல் தந்தனர்.

இது தவிர எம் சேன்ட் மணல் வினியோகமும் நடந்தது. ஆனால் எம் சேன்ட் மணலுக்கு தரக்கட்டுப்பாடு மற்றும் முறையாக மணலை கழுவி தராததால் அதன் தரம் கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் அதற்கான வசதி பல இடங்களில் இல்லை. இதனால் அடுக்குமாடி கட்டுமானத்தை நிறுத்தும்படி நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது 10 மணல் குவாரிகளில் 8 தான் உள்ளது. அதில் 4 குவாரிகளில் தான் மணல் வாங்க முடிகிறது. இதன் மூலம் மணல் முழுமையாக கிடைப்பதில்லை.

1 நாளைக்கு 20 ஆயிரம் லோடு தந்தால்தான் மணல் விலை குறையும். ஆனால் இப்போது 2 ஆயிரம் லோடு மணல்தான் வருகிறது. தற்போது திருட்டு மணல் சவுடு மணல், ஏரி மண் எடுப்பது அதிகமாகி விட்டது.

குன்றத்தூர் அருகே திருட்டு மணலை மலை போல் கொட்டி விற்பனை செய்கின்றனர். இது பற்றி கலெக்டரிடமும் புகார் செய்துள்ளோம். வேலூர், ஆற்காடு, திருவள்ளூரில் பகலிலேயே ரவுடிகள் துணையுடன் மணல் திருட்டு நடைபெறுகிறது. 27 மணல் குவாரிகள் புதிதாக திறக்கப்படும் என கூறுகிறார்கள்.

இதற்கு முன்பு ஆற்றுக்குள் சென்று லாரிகளில் மணல் எடுத்தனர். ஆனால் அரசே மணல் விற்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதால் அவர்களே மணலை அள்ளி வந்து யார்டில் குவித்து மணல் விற்பனை செய்கின்றனர். இதில் எந்த தவறும் நடைபெறுவதில்லை. லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கேமரா மூலம் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.

கூடுதல் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் திருட்டு மணல் குறைந்து விலையும் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News