செய்திகள்

நில விவகாரம்: திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பிடிவாரண்டு- ராஜபாளையம் கோர்ட்டு அதிரடி

Published On 2018-07-04 08:34 GMT   |   Update On 2018-07-04 08:34 GMT
ராஜபாளையம் அருகே நில விவகாரம் தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சைவ வேளாளர் சமுதாயத் தலைவர் சேதுராமலிங்கம் பிள்ளை ராஜபாளையம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ராஜபாளையம் அருகே உள்ள மடத்துப் பட்டியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது.

கடந்த 40 வருடங்களாக இந்த நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இங்கு நூலகம் அமைக்க அன்று இருந்த 23-வது குருமகா சன்னி தானத்தை அணுகினோம்.

அப்போது அவர் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து நிலத்தை சட்டப்படி நீங்கள் மீட்டால் நூலகம் அமைக்க இடம் அளிக்கிறேன் என்று உறுதி கூறினார்.

இதைத் தொடர்ந்து நாங்கள் சட்டப்போராட்டம் நடத்தி மடத்துப்பட்டியில் இருந்த ஆதீன இடத்தை மீட்டோம்.

இதனிடையே 23-வது மகா சன்னிதானம் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து 24-வது திருவாவடுதுறை சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணர் தேசிக பரமாச்சாரி சுவாமிகள் பொறுப்பேற்றார்.

அவரிடம் மடத்துப்பட்டியில் உள்ள நிலத்தில் நூலகம் அமைக்க இடம் கேட்டோம். அவர் இடம் தர முடியாது என தெரிவித்து விட்டார்.

அந்த நிலத்தை மீட்க ரூ. 20 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். தற்போது ஆதீனம் நிலத்தை தர மறுக்கிறார்.

எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 29-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் 3-ந் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆதீனம் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆதீனத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வானதி உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News