செய்திகள்

குழந்தை கடத்தல் பீதியில் வடமாநில வாலிபர்களை தாக்கியவர் கைது

Published On 2018-07-02 11:34 GMT   |   Update On 2018-07-02 11:34 GMT
குழந்தை கடத்தல் பீதியில் வடமாநில வாலிபர்களை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

குழந்தை கடத்தல் பீதியில் அப்பாவிகள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே திருவண்ணாமலையில் ஒரு பெண் அடித்துக் கொல்லப்பட்டார்.

நேற்று முன்தினம் சென்னையில் தங்கியிருந்து வேலை பார்க்கும் ஒடிசா வாலிபர்கள் 3 பேர் தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் நடந்து சென்றனர்.

அப்போது தெருவில் வடிவீஸ்வரன்- வரலட்சுமி தம்பதியரின் மகன் அவிநாஸ் (4) விளையாடிக் கொண்டிருந்தான். அவனிடம் வட மாநில இளைஞர்கள் சாதாரணமாக பேச்சுக் கொடுத்து இருக்கிறார்கள்.

இதை அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒரு மாணவன் பார்த்து இருக்கிறான். உடனே குழந்தையை கடத்தப் போகிறீர்களா? என்று சத்தம் போட்டுள்ளான். அதை கேட்டதும் விபரீதம் ஆகப் போகிறதோ என்று பயந்து அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர்.

இதற்கிடையில் அவி நாசின் உறவினர் பாலமுருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து வடமாநில வாலிபர்களை தேடினார். அப்போது தேனாம்பேட்டையில் சென்று கொண்டிருந்த 3 வாலிபர்களையும் தடுத்து சரமாரியாக தாக்கி இருக்கிறார். அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

குழந்தை கடத்துபவர்கள் என்று நினைத்து ரோட்டில் நின்றவர்கள் எல்லாம் சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள்.

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய இருவரையும் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

விசாரணையில் ஒருவர் பெயர் கோபால்சாகு (25), பினோத்பிகாரி (25) என்பதும் இருவரும் அண்ணாநகரில் தங்கியிருந்து மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி செய்து வரும் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

இதுபற்றி மைலாப்பூர் போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் கூறியதாவது:-

குழந்தை கடத்தல் பீதி இதுவரை புறநகர் பகுதிகளில்தான் இருந்தது. இப்போது சென்னைக்கும் பரவி இருக்கிறது.

ஒடிசா வாலிபர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என்ற பீதியில் தாக்கி இருக்கிறார்கள். உரிய நேரத்தில் போலீசார் சென்றதால் உயிருடன் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

பொதுவாக இந்த மாதிரி வதந்திகள் சமூக வலைத் தளங்கள், வாட்ஸ் அப்களில் அதிகமாக பரப்பப்படுகிறது. தேவையில்லாமல் இந்த மாதிரி வதந்திகளை பரப்பி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரவ விடுபவர்களை கண்காணித்து கைது செய்யும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Tags:    

Similar News