செய்திகள்

கோவையில் பல இடங்களில் குண்டு வைத்திருப்பதாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Published On 2018-06-27 12:29 GMT   |   Update On 2018-06-27 12:29 GMT
கோவையில் பல இடங்களில் குண்டு வைத்திருப்பதாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வாலிபர் ஒருவர் செல்போனில் பேசினார்.

அவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளேன், முடிந்தால் கண்டுபிடியுங்கள் என கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

கோவை மாநகர போலீசாருக்கும் தகவல் கூறி, மிரட்டல் வந்த செல்போன் எண்ணை தெரிவித்தனர். அதன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்த பீர் முகமது என்ற பச்சை மிளகாய்(வயது 35) என்பது தெரிய வந்தது.

அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே போலீசார் அவரது வீட்டுக்கு தேடிச் சென்றனர். அங்கு அவர் இல்லை. வெடிகுண்டு நிபுணர்கள் குனியமுத்தூரில் பல இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு சந்தேகத்திற்கிடமாக எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த பீர் முகமதுவை போலீசார் மடக்கினர்.

அப்போது போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். நான் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன், போலீசார் அனைவரையும் கொல்ல வேண்டும் எனவும் அவர் மிரட்டினார். போலீசார் அவரை கைது செய்தனர்.

சிறிது நேரம் கழித்து அவர் போலீசாரிடம் நான் குடிபோதையில் இருந்த போது வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறினார். இவர் கடந்த 1 வருடத்துக்கு முன்பும் இதே போல போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.

கைதான பீர் முகமது மீது இந்திய தண்டனை சட்டம் 294பி-தகாத வார்த்தைகளால் திட்டுதல், 506(1)- மிரட்டல் விடுத்தல், 507- மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கோவை ஜே.எம்.7 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பீர்முகமதுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News