செய்திகள்

தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ.தொண்டர்கள் 1720 பேர் மீதான வழக்கு ரத்து

Published On 2018-06-21 07:07 GMT   |   Update On 2018-06-21 07:07 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டதை விட தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டதாக 1720 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
மதுரை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் மதுரை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கடந்த 18-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கட்சியின் மத்திய ஆலோசனை குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டதை விட தொண்டர்கள் அதிகம் கலந்து கொண்டதாக தூத்துக்குடி தெற்கு போலீசார் கட்சி தொண்டர்கள் 1720 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது சட்ட விரோதமானது. எனவே அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டுகிறேன்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மனுதாரர் கட்சியை சேர்ந்த 1720 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சம்பந்தப்பட்ட போலீசார் ரத்து செய்து அது தொடர்பான அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். #Thoothukudifiring #MaduraiHighCourt
Tags:    

Similar News