செய்திகள்

ஊட்டியில் கன மழை கொட்டி தீர்த்தது - கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு

Published On 2018-05-17 17:12 GMT   |   Update On 2018-05-17 17:12 GMT
ஊட்டியில் கன மழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. பின்னர் காலை 11.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. ஊட்டியில் இடி, மின்னலுடன் தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.



இதனால் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மழை நின்ற பின்னர் படகு சவாரி தொடங்கியது. ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, மெயின் பஜார், கூட்ஷெட் சாலை, ஹில்பங்க், பிங்கர்போஸ்ட், நொண்டிமேடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். பலத்த மழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அங்கு ஒரு சில கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடை வியாபாரிகள் கால்வாயில் அடைப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றினர்.

ஊட்டி நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊட்டி படகு இல்ல சாலையில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தண்ணீர் பெருகி கிடந்தது. ஊட்டி படகு இல்லத்தில் இருந்து வந்த வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் திரும்பி மாற்று வழியில் சென்றன.

சில வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் மழைநீரை தள்ளிக்கொண்டு சென்றதை காண முடிந்தது. அப்போது ஒரு கார் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. பின்னர் அந்த கார் கயிறு கட்டி இழுக்கப்பட்டது. அங்கு மழைநீர் வடிந்தவுடன் போக்குவரத்து சீரானது. ஊட்டி ரெயில்வே போலீஸ் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழைக்கு ஒதுங்கி நின்றனர். அவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். பலத்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். பின்னர் மழை விட்டதும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான லவ்டேல், கேத்தி, எச்.பி.எப்., தலைகுந்தா, முத்தோரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பெரணி இல்லம் அருகே உள்ள பழுதடைந்த கண்ணாடி மாளிகையை முழுமையாக புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை காரணமாக கண்ணாடி மாளிகைக்குள் தண்ணீர் புகுந்தது.

அந்த தண்ணீரை தொழிலாளர்கள் வாளியில் எடுத்து ஊற்றி அகற்றினர். ஊட்டியில் பலத்த மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மழையை தொடர்ந்து குளிர் நிலவியதால் ஊட்டி நகரில் இதமான காலநிலை நிலவியது. 
Tags:    

Similar News