செய்திகள்

எஸ்.வி.சேகருக்கு எதிராக மாதர் சங்கம் போராட்டம் - கைது செய்ய கோரிக்கை

Published On 2018-05-16 08:18 GMT   |   Update On 2018-05-16 08:18 GMT
எஸ்.வி. சேகருக்கு எதிராக இன்று மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை:

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்த சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 25 நாட்களாகியும், இதுவரை கைது செய்வதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் எஸ்.வி. சேகருக்கு எதிராக இன்று மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் லஸ் கார்னரில் அனைத்து இந்திய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எஸ்.வி.சேகருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனரையும் பிடித்திருந்தனர்.

இந்த நிலையில் எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி மயிலாப்பூர் பகுதியில் அதிகமாக காணப்பட்டது. அவருக்கு எதிரான வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

எஸ்.வி.சேகர் மீது பொது அமைதியை சீர் குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News