செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அரசை முழுமையாக ஆதரிக்கும்படி சசிகலா சத்தியம் வாங்கினார்- திவாகரன் மகன்

Published On 2018-05-03 01:57 GMT   |   Update On 2018-05-03 01:57 GMT
எடப்பாடி பழனிசாமி அரசை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று சிறைக்கு செல்லும் முன்பு எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா சத்தியம் வாங்கினார் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் கூறினார்.#TTVDhinakaran #Dhivakaran #JaiAnand #TNCM
சென்னை:

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அம்மா அணி என்ற புதிய கட்சியை திவாகரன் தொடங்கியுள்ளார். இந்தநிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருந்தோம். பிரிவை ஏற்படுத்தியது அவர்கள் தான். நாங்கள் முக்கியத்துவத்தையோ, பதவியையோ எதிர்பார்க்கவில்லை. ஒரு மனிதன் சக மனிதனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை அங்கு இல்லை. நேற்றுவரை டி.டி.வி நல்ல தலைவர் என்று தான் நினைத்து இருந்தோம். வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாத ஒருவர் நல்ல தலைவர் என்ற பெயரை எடுத்து இருக்கிறார் என்றால், அது நடிப்பின் மூலமாக மட்டும் தான் எடுத்து இருக்கிறார். அதை நாங்கள் உணர்ந்து விட்டோம், வெளியேறிவிட்டோம்.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொடர்பு கொள்ளும் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி ஏன் இப்படிப்பட்ட ஒரு முடிவு? என்ன காரணம்? என்று கேட்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் விளக்குகிறோம். இப்போது தான் குழந்தை (அம்மா அணி) பிறந்து 3 நாட்கள் ஆகி உள்ளது. உண்மையாக இருந்தவர்கள் பலர் எங்களிடம் வந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மை சற்று காலதாமதமாகத் தான் தெரிய வரும். விரைவில் பலர் வருவார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பல குறைகள் இருக்கின்றன. ஒரு குறைபாடு உள்ள ஆட்சி தான். அதை மறுக்க இயலாது. அ.தி.மு.க.வில் இருக்கும் பலர் எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் பலர் எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். சிறையில் இருப்பவர் (சசிகலா) தற்போது தற்சமயம் யாருக்கும் ஆதரவு கொடுக்க முடியாது. சிறையில் இருப்பவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். அந்த முடிவை எடுத்து இருக்கிறார் என்பதை எல்லாம் நம்ப முடியவில்லை. அவர் சிறையில் இருந்து வந்த பிறகு தான் தெரியும்.



சசிகலா சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கூப்பிட்டு எடப்பாடியை நீங்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். நாங்கள் எடப்பாடிக்கு ஆதரவாகத்தானே செயல்பட முடியும். நாங்கள் எப்படி எதிர்த்து செயல்பட முடியும்.

கட்சி தொடங்கப்பட்டது குறித்து சசிகலாவுக்கு நாங்கள் சொல்லவில்லை. கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் கிடையாது. மீண்டும் நாங்கள் டி.டி.வி. தினகரனுடன் இணைய மாட்டோம். அதற்கான எல்லை தாண்டி விட்டது. மீண்டும் இணைவோம் என்று கூறுவதை எல்லாம் நம்ப முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Dhivakaran #JaiAnand #TNCM
Tags:    

Similar News