செய்திகள் (Tamil News)

பெரியபாளையத்தில் மணல் எடுப்பதை கண்டித்து போராட்டம்

Published On 2018-04-28 09:52 GMT   |   Update On 2018-04-28 09:52 GMT
பெரியபாளையத்தில் மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளைளம்:

ஊத்துக்கோட்டை வட்டக்குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் உள்ள கீழ்மாளிகைப்பட்டு, செங்காத்தாகுளம், ஏரிக்குப்பம்,காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதாக கூறப்படுகிறது.

மேலும், பட்டா நிலம் உள்ளிட்ட பல பகுதிகளில் 30 அடி ஆழத்துக்கு மேலாக மணல் எடுப்பதாக கூறப்படுகிறது.ஆற்றின் கரையை உடைத்து மணல் எடுக்கதாகவும் கூறப்படுகிறது. இதனை அனைத்து துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

பெரியபாளையத்தில் உள்ள வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். எனவே, பெரியபாளையத்தில் இருந்து மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.

வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஊத்துக்கோட்டை துணை தாசில்தார் திருமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் காயத்ரி மட்டுமே இருந்தனர். தங்களது கோரிக்கை மனுவை தாசில்தார் ரவிச்சந்திரன் வந்தால்தான் மனு கொடுப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இதற்கு வருவாய்துறை அதிகாரிகள் உரிய பதில் கூறவில்லை. ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தாசில்தார் வர நீண்ட நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வருவாய் அலுவலர் அலுவலகம் எதிரே பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆரணி, ஊத்துக்கோட்டை,சென்னை நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் ஒருமணி நேரம் ஸ்தம்பித்து நின்றது. ஊத்துக்கோட்டையில் இருந்து தாசில்தார் ரவிச்சந்திரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

அனைத்து கோரிக்கைகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி கூறினார். இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News