செய்திகள்

ராணுவத்துக்கு உதவும் செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Published On 2018-04-25 06:07 GMT   |   Update On 2018-04-25 06:07 GMT
ராணுவத்துக்கு உதவும் ‘ஜிசாட்-7ஏ’ என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.#ISRO
சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வரவிருக்கும் மாதங்களில் முக்கியமான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக இந்திய ராணுவத்துக்கு உதவும் செயற்கைகோளை விண்ணில் செலுத்துகிறது. இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் செப்டம்பர் மாதம் ‘ஜிசாட்-7ஏ’ என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் ரேடார் நிலைய தகவல் தொடர்புகளை விமானங்களுடன் இணைக்க முடியும்.

ஜிசாட்-11 என்ற தகவல்தொடர்புக்கான கனரக செயற்கைகோள் மே அல்லது ஜூன் மாதம் பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து ஜிசாட்-29 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜூன் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

சந்திரனின் மேல் பரப்பை ஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 என்ற விண்கலம் அக்டோபர் மாதம் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் ரிசாட்-2ஏ என்ற நவீன தொலைதூர உணர்திறன் செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இது நாட்டின் கண்காணிப்பு திறன்களை உயர்த்துவதற்கான ஒரு மேம்பட்ட தொலைநோக்கு செயற்கைகோளாகும்.

கனரக செயற்கைகோள்கள் அனைத்திலும் வினாடிக்கு 100 ஜிகாபைட் வரை உயர் அலைவரிசை இணைப்பு வழங்கப்படும். இவை கிராமப்புறங்களில் அதிவேக இணைய இணைப்புகளை வழங்குவதோடு டிஜிட்டல் சேவைக்கும் உதவும். நடப்பாண்டு சராசரியாக மாதம் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இந்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews #ISRO
Tags:    

Similar News