செய்திகள்
கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்

களக்காடு அருகே அம்மன் கோவிலில் துணிகர கொள்ளை

Published On 2018-04-24 14:36 GMT   |   Update On 2018-04-24 14:36 GMT
களக்காடு அருகே அம்மன் கோவில் உள்ளே இருந்த உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள பத்மநேரியில் சாலை இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இன்று காலை வழிபாட்டுக்காக கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் வந்தனர்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். கோவில் உள்ளே இருந்த உண்டியலை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

மேலும் அங்குள்ள கருவறை அருகில் உள்ள மற்றொரு கதவையும் உடைத்துள்ளனர். மேலும் பீரோவில் அம்மனுக்குரிய நகை எதுவும் உள்ளதா என திறந்து பார்த்துள்ளனர். பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

சம்பவம் நடந்த பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். வாழை அறுவடை காலம் என்பதால் உண்டியலில் விவசாயிகள் அதிகளவில் காணிக்கை செலுத்தி இருப்பார்கள் என தெரிகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் உண்டியல் பணம் கொள்ளை போய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் கோவில் நிர்வாகத்தார் அங்கு கண்காணிப்பு கேமிரா பொருத்தினர். நேற்று வந்த கொள்ளையர் அந்த கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். இதுதொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News