செய்திகள்

நிர்மலாதேவி விவகாரத்தில் தவறு செய்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன்

Published On 2018-04-24 03:32 GMT   |   Update On 2018-04-24 03:32 GMT
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தவறு செய்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். #AruppukottaiProfessor #NirmalaDevi
சென்னை:

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பாலியல் புகார் குறித்து விசாரிக்க அனைத்துக் கல்லூரிகளிலும் அந்தந்த கல்லூரி முதல்வர் தலைமையில் கமிட்டி செயல்படுகிறது. பாலியல் புகார் சம்பந்தமாக இந்த கமிட்டியிடம் புகார் செய்யலாம். சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் வந்தது. விசாரணைக்கு பின்பு அவர் வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜாராம் இருந்தபோது லஞ்சம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித்தகுதி இல்லாத 6 பேர் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு பின்பு உரிய முடிவு எடுக்கப்படும். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.



விசாரணை முடிவுக்கு பின்பு, பேராசிரியர்கள் யாரேனும் தவறு செய்திருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #AruppukottaiProfessor #NirmalaDevi

Tags:    

Similar News