செய்திகள்

குடிநீர் கேட்டு வத்தலக்குண்டு யூனியன் அலுவலகம் முற்றுகை

Published On 2018-04-20 12:09 GMT   |   Update On 2018-04-20 12:09 GMT
குடிநீர் கேட்டு வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் இ.பி. காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2 ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆழ்துளை கிணற்றின் மோட்டார் பழுதாகி விட்டது. இதனை சரி செய்வதற்காக பணியாளர்கள் எடுத்து சென்றனர். ஆனால் மீண்டும் பொருத்தப்பட வில்லை.

இதனால் கடந்த 4 மாதங்களாக கிராம மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா விரைந்து சென்றுபொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பழு நீக்க எடுத்து செல்லப்பட்ட மோட்டார் உடனடியாக மீண்டும் பொருத்தப்படும். குடிநீர் வினியோகம் சீராக நடவடிக்க எடுக்கப்படும் என ஊறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News