செய்திகள்

மெட்ரோ ரெயிலில் 10 ரூபாய் டிராவல் கார்டு நிறுத்தம்

Published On 2018-04-20 10:59 GMT   |   Update On 2018-04-20 10:59 GMT
ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரெயிலில் 10 ரூபாய் டிராவல் கார்டு நேற்று முதல் நிறுத்தப்பட்டது. #MetroRail

சென்னை:

சென்னையில் விமான நிலையம் மற்றும் பரங்கிமலைக்கு கோயம்பேடு வழியாக நேரு பூங்கா வரையும் விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் தொடங்கப்பட்ட புதிதில் கூட்டம் இல்லாததால் பயணிகள் வருகையை அதிகரிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரெயிலில் டோக்கன் மற்றும் டிராவல் கார்டு பயன்படுத்தி பயணம் செய்யலாம். டிராவல் கார்டு வாங்கி பயணம் செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டண சலுகை உண்டு. டிராவல் கார்டை 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். இதில் 50 ரூபாய் வைப்புத் தொகையாகும். பயணம் செய்யும் போது கார்டை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

டிராவல் கார்டு வேண்டாம் என்று டிக்கெட் கவுண்டரில் திரும்ப ஒப்படைத்தால் 50 ரூபாய் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

கோயம்பேடு, நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் பயணிகள் வருகையை அதிகரிக்க இவ்வழியில் மட்டும் டிராவல் கார்டு 10 ரூபாய் வைப்புத் தொகை பெறப்பட்டது. பயணம் செய்யும் போது டிராவல் கார்டில் டிக்கெட் கட்டண தொகையை தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

10 ரூபாய் வைப்புத் தொகையில் டிராவல் கார்டு வாங்கியவர்கள் மீண்டும் பயணம் செய்யவில்லை. கார்டை திரும்ப ஒப்படைத்து வைப்பு தொகையையும் பெறவில்லை.

ஒரு டிராவல் கார்டு தயாரிக்க 63 ரூபாய் செலவிடப்படுகிறது. இது 10 ரூபாய்க்கு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை மீண்டும் பயன்படுத்தாத பட்சத்தில் ஒரு கார்டுக்கு 53 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் மட்டும் இதுவரை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு ரூ.3 கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் கோயம்பேடு- நேரு பூங்கா ரெயில் நிலையங்கள் இடையே 10 ரூபாய் டிராவல் கார்டு நேற்று முதல் நிறுத்தப்பட்டது. தற்போது இங்கும் டிராவல் கார்டு வைப்புத் தொகை 50 ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது. #MetroRail

Tags:    

Similar News