செய்திகள்

பழனி நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Published On 2018-04-17 10:29 GMT   |   Update On 2018-04-17 10:29 GMT
அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால் பழனி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பழனி:

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு மழை பெய்தது. இதன் காரணமாக பழனி பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி ஆகியவற்றுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதில் வரதமாநதி நிரம்பி மறுகால் பாயும் அளவுக்கு நீர்வரத்து இருந்தது.

நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது. ஒரு சில மாதங்கள் மட்டுமே மழை பெய்ததாலும், அதன் பின்னர் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இதன் காரணமாக அணையில் தண்ணீருக்கடியில் மூழ்கி இருந்த மண்மேடுகள் எல்லாம் தற்போது வெளியே தெரிய தொடங்கி உள்ளன.

அதன்படி 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் தற்போது 27.66 அடி வரையே தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 4 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வரதமாநதியின் மொத்த உயரமான 66 அடியில் தற்போது 34.58 அடி வரையே தண்ணீர் உள்ளது.

அணையில் இருந்து வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையில் 31.82 அடி வரையே தற்போது தண்ணீர் உள்ளது.

அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால் பழனி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதை தடுப்பதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் வரதமாநதி அணையில் இருந்து கோடைகால நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கோடைகால நீர்தேக்கத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். பருவமழை பெய்யும் வரை நகரில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முடியும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பாலாறு-பொருந்தலாறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் மண்மேடுகள் வெளியே தெரிவதை படத்தில் காணலாம்.

Tags:    

Similar News