செய்திகள்

கண்டக்டர்-டிரைவர் மீது தாக்குதல்- மாநகர பஸ்களை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டம்

Published On 2018-04-15 11:24 GMT   |   Update On 2018-04-15 11:24 GMT
கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அறிந்ததும் அவ்வழியே வந்த 10-க்கும் மேற்பட்ட மாநகர பஸ்களை நடுவழியில் நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதவரம்:

சென்னை உயர் நீதி மன்றத்தில் இருந்து காரனோடை நோக்கி நேற்று இரவு மாநகர பஸ் (எண் 57 எப்) சென்றது. டிரைவர் ராதா பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக கார்த்திக்ராஜா இருந்தார்.

சோழவரம், ஜி.என்.டி. சாலையில் வந்த போது பஸ்சை பின்னால் வந்த கார் முந்தி செல்ல முயன்றது. இதில் ஏற்பட்ட தகராறில் காரில் இருந்த 4 வாலிபர்கள் பஸ்சை வழி மறித்து டிரைவர் ராதா, கண்டக்டர் கார்த்திக் ராஜாவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அவ்வழியே வந்த 10-க்கும் மேற்பட்ட மாநகர பஸ்களை நடுவழியில் நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து நிறுத்தியிருந்த பஸ்களை டிரைவர்கள் மீண்டும் இயக்கினர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல் தொடர்பாக சோழவரத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News