செய்திகள்

காஷ்மீர் சிறுமி பலாத்காரம் குறித்து வகுப்பில் பேசிய சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்டு

Published On 2018-04-15 07:15 GMT   |   Update On 2018-04-15 07:15 GMT
காஷ்மீர் சிறுமி பலாத்காரம் குறித்து வகுப்பில் பேசிய கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்டு செய்யப்பட்டார். #JusticeForAshifa

வடவள்ளி:

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் பிரியா. இவர் கோவை அரசு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் வகுப்பறையில் இருந்த போது காஷ்மீர் சிறுமி படுகொலை தொடர்பாக சக மாணவிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து இரு மாணவர்கள் கல்லூரி பேராசிரியை அம்முவிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவர்களுக்கிடையே பாலினம், மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், அதனை கேட்க சென்ற ஆசிரியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறி மாணவி பிரியாவை சஸ்பெண்டு செய்வதாக சட்டக் கல்லூரி முதல்வர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாணவி பிரியா கூறியதாவது-

கல்லூரியில் காலை 2-வது வகுப்பு நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது ஆசிரியர் சமூக பிரச்சினைகள் குறித்து ஒவ்வொருவாக பேசும் படி கூறினார்.

அப்போது நான் காஷ்மீரில் 8 வயது சிறுமியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது குறித்து பேசினேன். இது போன்ற பிரச்சினைகளுக்கு சமூகம் தான் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே பெண்கள் இந்த சமூகத்திடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றேன்.

நான் பேசிக்கொண்டு இருக்கும் போது வகுப்பில் இருந்து வெளியே சென்ற 2 மாணவர்கள் அம்மு என்ற பேராசிரியையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த பேராசிரியை அம்மு எனது பேச்சை கண்டித்ததுடன் சரமாரியாக திட்டி மிரட்டல் விடுத்தார்.

வகுப்பறையிலேயே முடிந்து விட்ட இந்த சம்பவம் தொடர்பாக என்னிடமும், சக மாணவர்களிடமும் விசாரணை நடத்தாமலே கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. முதல்வரும் என்னிடம் விசாரிக்காமல் சஸ்பெண்டு செய்வதாக அறிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #JusticeForAshifa

Tags:    

Similar News