செய்திகள்

விவசாயிகளுக்கு வழிகாட்டும் உழவன் ஆப்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

Published On 2018-04-07 06:59 GMT   |   Update On 2018-04-07 06:59 GMT
வேளாண்மைத் துறை சார்ந்த தகவல்கள் அனைத்தும் விரைவாக விவசாயிகளை சென்றடையும் வகையில் உழவன் என்ற பெயரில் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

வேளாண்மைத் துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக வேளாண் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளிடம் விரைவில் சென்றடைவதற்காக “உழவன்” என்ற கைபேசி செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  துவக்கி வைத்தார்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வகுக்கப்பட்டுள்ள இந்த “உழவன்” கைபேசி செயலி மூலம் விவசாயிகள், வேளாண்மை  தொடர்பான அனைத்து திட்டங்களின் மானிய விவரங்கள், டிராக்டர், பவர் டில்லர் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் நிழல் வலைக் குடில், பசுமைக் குடில் போன்ற உயர் மதிப்புள்ள உட்கட்டமைப்புகளை மானியத்தில் பெறுவதற்கு முன்பதிவு செய்தல்,  

அகில இந்திய அளவில் முதல் முயற்சியாக  பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும், தாங்கள் பயிர் காப்பீடு செய்த விவரங்கள் அறிதல், தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கடைகளில் விதை  மற்றும் உர இருப்பு விவரங்கள், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி, விளைப் பொருட்களின் சந்தை  விலை விவரங்கள்,

விவசாயிகள் தங்களது பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரங்களை அறியும் வசதி மற்றும் வேளாண் விரிவாக்க பணியாளர்கள் வருகை விவரம் போன்ற  ஒன்பது வகையான சேவைகளை பெற்று பயன்பெறலாம்.

“உழவன்” கைபேசி செயலியினை  கூகுள்  பிளே ஸ்டோர் மூலமாக விவசாயிகள் தங்களின் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். #tamilnews   
Tags:    

Similar News