செய்திகள்

காரிமங்கலம் நகர்ப்பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

Published On 2018-04-03 09:39 GMT   |   Update On 2018-04-03 09:39 GMT
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் நகர்ப்பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

காரிமங்கலம்:

காரிமங்கலம் பேரூராட்சியில், ஒகேனக்கல், தென்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடந்த ஒரு வாரமாக அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்தும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை.

இதனால் அக்ரஹாரம், ராமாபுரம் உள்ளிட்ட அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீரை சுமந்து வரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பேரூராட்சி நிர்வாகத்தால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட போர்வெல் டேங்குகள் பழுதடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது.

இது தொடர்பாக பேரூராட்சி பகுதி மக்கள் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மோட்டார் பழுதால் தண்ணீர் வினியோகத்தில் சிக்கல் இருப்பதாக பேரூராட்சி தரப்பில் தெரிவித்தனர்.

தற்போது கோடை காலம் நெருங்குவதால், இந்த சூழலில் தண்ணீரின்றி தவித்து வருவது மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

இதனால் பேரூராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News