செய்திகள்

ரூ.824 கோடி வங்கிக் கடன் மோசடி- கனிஷ்க் கோல்டு உரிமையாளர் பூபேஷ்குமாரிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை

Published On 2018-03-22 07:27 GMT   |   Update On 2018-03-22 07:27 GMT
வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கு தொடர்பாக பிரபல நகைக்கடை உரிமையாளர் பூபேஷ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #KanishkGold #BhoopeshKumar
சென்னை:

போலி ஆவணங்கள் மூலம் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீடா ஜெயின், அவர்களின் கூட்டாளிகள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதோடு சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி வேட்டையிலும் நேற்று பிற்பகலில் ஈடுபட்டனர். சென்னையில் அவருக்கு சொந்தமான கனிஷ்க் தங்க நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இன்றும் 2-வது நாளாக கனிஷ்க் தங்க நிறுவனத்தில் இயக்குனர்களாக இருப்பவர்களின் வீடுகளில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. பூபேஷ்குமார் ஜெயினும், அவரது கூட்டாளிகளும் வங்கிகளை எப்படி ஏமாற்றி மோசடி செய்தனர் என்பதற்கான ஆவணங்களும் கிடைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.



பூபேஷ்குமார் ஜெயின் ஏற்கனவே ரூ.20 கோடி கலால் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வழக்கு உள்ளது. கடந்த ஆண்டு அவர் அதற்காக கைதாகி விடுதலையானார். அதன் பிறகுதான் அவரது வங்கிக் கடன் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தன் மீதான சிபிஐ பிடி இறுகியதையடுத்து பூபேஷ்குமார் ஜெயின் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை சி.பி.ஐ. மறுத்துள்ளது. பூபேஷை நேற்று மாலையில் இருந்து பெங்களூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் முடிவில் பூபேஷ் குமார் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதேபோல் அவர்களின் கூட்டாளிகளையும் கைது செய்யயும் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். #KanishkGold #BhoopeshKumar #CBI
Tags:    

Similar News