செய்திகள்

சேலம்-சென்னைக்கு 25-ந் தேதி முதல் விமான சேவை தொடக்கம்

Published On 2018-03-19 12:01 GMT   |   Update On 2018-03-19 12:01 GMT
வருகிற 25-ந் தேதி முதல் சேலம்-சென்னைக்கு விமான சேவை போக்குவரத்து தொடங்கப்படுகிறது. முதல் நாளில் பயணம் செய்ய 50 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் கடந்த 1993-ம் ஆண்டு 163 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்து.

பயணிகள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் என்.இ.பி.சி. என்ற தனியார் நிறுவனம் விமான சேவையை தொடங்கியது. விமான சேவையை தொடங்கிய சில மாதங்களிலேயே பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது.

16 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு தரப்பினரின் முயற்சியால் கடந்த 2010-ம் ஆண்டு மீண்டும் சேலத்தில் இருந்து விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. கிங்பி‌ஷர் நிறுவனம் சேலம்- சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கும் போதிய வரவேற்பு கிடைக்காததால் விமான சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சேலம் ஸ்மார்ட் சிட்டியாக வளர்ந்து வரும் நிலையில் தொழில்துறை வளர்ச்சிக்கும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் விமான சேவை தேவை என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையே சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில் மத்திய அரசின் உதான் திட்டம் மூலம் நகரங்களை இணைக்கும் வகையில் ஹைதராபாத், சென்னை, சேலத்திற்கு வருகிற 25-ந் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 72 இருக்கை வசதிகளுடன் இந்த விமான சேவை தொடங்கப்படுகிறது.

விமான சேவை தொடங்கப்பட உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று வருகிற 25-ந் தேதி முதல் சென்னையில் இருந்து காலை 10.40 மணிக்கு விமானம் சேலத்திற்கு வருகிறது. அன்று காலை 11 மணிக்கு சென்னைக்கு செல்லும் விமான சேவையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இந்த விமானம் 11.50 மணிக்கு சென்னை சென்றடையும். உதான் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் ரூ.1499 கட்டணத்தில் இந்த விமான சேவை தொடங்க உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் நலன் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றார்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படும் தொடக்க நாளான 25-ந் தேதி பயணம் செய்ய 50 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். விமானத்தில் உள்ள 72 இருக்கையில் 36 இருக்கைகளுக்கு மட்டும் 1499 ரூபாய் டிக்கெட் வழங்கப்படும். மற்ற இருக்கைகளுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தொடர்ந்து மற்ற நாட்களில் பயணம் செய்ய சேலம்- சென்னை மற்றும் சென்னை-சேலத்திற்கு 1000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் இதுவரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூங்கும் வசதியுடன் கூடிய முதல் வகுப்பு ஏ.சி. பயணத்திற்கு ரூ.1500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரெயிலில் சேலம்- சென்னைக்கு குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஆகும்.

விமான சேவை தொடங்கினால் ஒரே நாளில் அவசரமாக சென்னை செல்வதற்கும், சென்னையில் இருந்து சேலம் வருவதற்கும் உதவியாக இருக்கும். இதனால் சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பிற மாநில தொழில் பிரதிநிதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News