செய்திகள்

முதல் பெண் விமானி அவானி சதுர்வேதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Published On 2018-02-23 18:08 GMT   |   Update On 2018-02-23 18:08 GMT
நாட்டிலேயே முதல் பெண் விமானியான அவானி சதுர்வேதிக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #kamalhasan #avanichaturvedi
சென்னை:

இந்திய ராணுவத்தில் போர் விமானத்தை இயக்குவதற்கு விமானிகளாக பெண்களையும் சேர்க்கலாம் என பாதுகாப்பு துறை முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமானப்படை போர் விமானிகளாக பாவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகிய 3 பெண்கள் பொறுப்பேற்றனர். விமானப்படையில் பல்வேறு சவால் மிக்க பயிற்சிகளையும் மேற்கொண்டு போர் விமானிகளாக தேர்வான அவர்கள், விமானப்படையில் கடந்த ஆண்டு சேர்ந்தனர்.

இதற்கிடையே, இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் எம்.ஐ.ஜி. 21 ரக போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார்.



இதன்மூலம் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமையை இவர் பெற்றார். முதல் பெண் விமானியாக தேர்வான அவானி சதுர்வேதிக்கு பலரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டிலேயே முதல் பெண் விமானியான அவானி சதுர்வேதிக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண்மணி தனியாக போர் விமானத்தை இயக்கியுள்ளார். அவரை போல் இன்னும் பலர் இத்துறைக்கு வரவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
#kamalhasan #avanichaturvedi #tamilnews
Tags:    

Similar News