செய்திகள்

தண்டராம்பட்டு அருகே 10-ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2018-02-19 17:28 GMT   |   Update On 2018-02-19 17:28 GMT
தண்டராம்பட்டு அருகே இன்று நடக்க இருந்த 10-ம் வகுப்பு மாணவி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகே உள்ள சே.ஆண்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து அதே பகுதியை சேர்ந்த நடேசன் மகன் பவுன்குமார் (வயது27). பெயிண்டர் என்பவரை நிச்சயம் செய்தனர்.

மாப்பிள்ளை வீட்டிலேயே திருமணம் செய்ய முடிவு செய்து நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. இன்று காலை தாலிகட்டும் முகூர்த்தம் நடக்க இருந்தது.

இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமிக்கு, 10-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தாசில்தார் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள், சிவலிங்கம், ஏழுமலை, முத்து, சம்பத் மற்றும் தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 10-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. 

இதையடுத்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 18 வயது பூர்த்தியாகாமல் சிறுமிக்கு திருமணம் செய்ய கூடாது என்று பெற்றோர்களை எச்சரித்தனர். மாணவியை மீட்டு திருவண்ணாமலை சமூக நல அமைப்பில் ஒப்படைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. #tamilnews

Tags:    

Similar News