செய்திகள்

சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12 கோடி மோசடி பணத்தை திரும்ப பெற நடவடிக்கை

Published On 2018-02-18 10:07 GMT   |   Update On 2018-02-18 10:07 GMT
சென்னையைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12 கோடி மோசடி பணத்தை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11,700 கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வங்கியிலும் இது போல் மோசடி நடைபெற்றுள்ளதா? என்று சம்பந்தப்பட்ட வங்கிகள் ஆய்வு நடத்தி வருகின்றன.

பணம் டெபாசிட் செய்யாமலேயே ஸ்விப்ட் முறையில் ஒரு வங்கியில் இருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதற்கு உத்தரவாதி கடிதம் அனுப்பினால் போதும். பணபரிமாற்றம் செய்யப்பட்ட பின்பு அந்த தொகை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு திரும்பி செலுத்தப்படும்.

இந்த ஸ்விப்ட் முறையில் முறைகேடு செய்து ஆயிரக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கியில் கணக்குகளை தணிக்கை செய்த போது பஞ்சாப் நே‌ஷனல் வங்கி போல் இங்கும் ரூ.12 கோடியே 80 லட்சம் மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

போலியான உத்தரவாத கடிதங்களை தயாரித்து ‘ஸ்விப்ட்’ முறையில் 3 தவணைகளாக மொத்தம் ரூ.12 கோடியே 80 லட்சம் பணம் வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

முதல் தவணையாக 5 லட்சம் அமெரிக்க டாலர் நியூயார்க்கில் உள்ள வங்கி மூலமாக துபாயில் உள்ள வங்கிக்கணக்குக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டதால் 5 லட்சம் அமெரிக்க டாலர் வங்கிக்கே திரும்பி வந்து விட்டதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2-வது தவணையாக 3 லட்சம் யூரோ பணம் பிராங்க் பர்ட் வங்கி மூலம் துருக்கி வங்கிகணக்கும், 3-வது தவணையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் நியூயார்க் வங்கி கணக்கில் இருந்து சீனாவைச் சேர்ந்த வங்கிக்கும் பணம் அனுப்பி முறைகேடு நடந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தேசிய சைபர் பாதுகாப்பு கவுன்சில் இந்த பணத்தை திரும்ப பெற முயன்று வருவதாக சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டது யார்? வங்கி அதிகாரிகள் உடந்தையா? என சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.
Tags:    

Similar News