செய்திகள்

வியாசர்பாடியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடை, விளம்பர பலகை அகற்றம்

Published On 2018-02-16 11:29 GMT   |   Update On 2018-02-16 11:29 GMT
வியாசர்பாடி அம்பேத்கார் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடை மற்றும் விளம்பர தட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடி அம்பேத்கார் சாலையில் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்பட்டு வருகிறது. தண்ணீர் லாரிகள் அங்கிருந்து நீரை பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கணேசபுரம் ரெயில்வே பாலம் வரை ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் எளிதாக செல்ல முடியவில்லை.

அந்த சாலையில் விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்து வந்தன. இதனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கையில் இறங்கியது.

போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஜெரால்டு, சரோஜா ஆகியோர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டியுள்ள பகுதிகளை இடித்தார்கள்.

கடைகளின் விளம்பர பலகைகள் இடையூறாக இருந்தால் அவற்றையும் அகற்றினார்கள். சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிளாட்பாரம், படிக்கட்டுகள், விளம்பர தட்டிகள், கடைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஊழியர்கள் அகற்றினார்கள்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் தலையிட்டதால் அவர்கள் அமைதியாக சென்றனர்.

சாலையின் இருபுறத்தையும் வியாபாரிகளும், குடியிருப்புவாசிகளும் ஆக்கிரமித்து கொண்டதை அகற்றிய பிறகு அந்த பகுதி விசாலமாக காணப்பட்டது. வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்ல முடிகிறது.

ஆரம்பத்தில் சாலையை ஆக்கிரமிக்கும் போதே தடுத்து நடவடிக்கை எடுத்தால் இது போன்ற நிலை ஏற்படாது. ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கருத்து தெரிவித்தனர். #tamilnews

Tags:    

Similar News