செய்திகள்

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கவே கிடைக்காது: சுப்பிரமணியசுவாமி பேட்டி

Published On 2018-02-04 16:14 GMT   |   Update On 2018-02-04 16:14 GMT
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான ஆட்சி பாராட்டும் படி இல்லை. இதனால் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கவே கிடைக்காது என்று சுப்பிரமணியசுவாமி கூறினார். #subramanianswamy #Cauverywater

முள்ளக்காடு:

பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்பிரமணியசுவாமி எம்.பி. தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான ஆட்சி பாராட்டும் படி இல்லை. இதனால் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கவே கிடைக்காது. முதல்வரும், துணை முதல்வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக என்னிடம் கருத்து கேட்டால் 3 மாதத்தில் இத்தாலியில் இருந்து இத்திட்டத்தை கொண்டு வருவேன்.

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் வெளியில் பேசுவதை விட பாராளுமன்றத்தில் அவர்கள் குரல் எழுப்ப வேண்டும். பா.ஜ.க. மீது காங்கிரஸ் புகார் கூறுவதில் உண்மை இல்லை. ப.சிதம்பரம் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. விரைவில் அவர் சிறைக்கு செல்வார்.

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் தலைவர்களை விட்டு விட்டு சிறப்பாக செயல்படும் தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

டி.டி.வி. தினகரனின் செயல்பாடு நன்றாக உள்ளது. அவர் ஆர்.கே.நகரில் வெற்றி பெற திறமையாக செயல்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நெல்லை வந்த சுப்பிரமணியசுவாமிக்கு நெல்லையப்பர் கோவில் முன்பு அர்ச்சகர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

இந்து கோவில்களில் ஆகம விதிப்படி வழிபாடு மற்றும் புனரமைப்புகள் நடக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்து ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படாததால் அசம்பாவிதம் நடந்ததா என விசாரணை நடத்தினால் தெரியவரும். தமிழகத்தில் 45 ஆயிரம் கோவில்கள் அரசு பராமரிப்பில் உள்ளது. இந்த கோவில்கள் மோசமாக காணப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 10 நாளில் மேல்முறையீடு செய்யப்படும். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். கனிமொழி-ராசாவுக்கு தண்டணை கிடைக்கும். சில வழக்குகளில் கீழ் நீதிமன்றங்கள் விடுதலை செய்தாலும் உச்ச நீதிமன்றம் தண்டணை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #subramanianswamy #Cauverywater

Tags:    

Similar News