செய்திகள்

திண்டுக்கல்- பழனியில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

Published On 2018-01-23 10:07 GMT   |   Update On 2018-01-23 10:07 GMT
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் மற்றும் பழனியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் மற்றும் பழனியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பஸ்களில் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. திண்டுக்கல்- நத்தம் சாலையில் ஆர்.எம்.டி.சி. காலனி பகுதியில் இன்று காலை கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அரசு பஸ்களை சிறை பிடித்தும், பஸ்கள் முன்பு படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் யாரும் உடனடியாக அங்கு வரவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்தது. காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்லும் சமயத்தில் போராட்டம் நடந்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இருந்தபோதும் பஸ்களில் பயணம் செய்தவர்களும் இறங்கி வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு கூடியது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்டண உயர்வை எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களையும் மாணவர்களையும் நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். தமிழக அரசு இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என்றும் தமிழகம் முழுவதும் மீண்டும் மாணவர் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரித்தனர்.

வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News