செய்திகள்

சென்னை புத்தக கண்காட்சி நிறைவு: ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

Published On 2018-01-23 04:09 GMT   |   Update On 2018-01-23 04:09 GMT
கடந்த 12 நாட்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியது. #chennaibookfair
சென்னை:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 41-வது சென்னை புத்தக கண்காட்சி 10-ந்தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த கண்காட்சியில் ஆன்மிகம், விளையாட்டு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் அடங்கிய 708 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

56 மற்றும் 57-ம் எண் அரங்குகளில் ‘தினத்தந்தி’ பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் இடம் பெற்று இருந்தன.

கடந்த 12 நாட்களாக நடந்த புத்தக கண்காட்சியை, புத்தக நேசிப்பாளர்களும், வாசகர்களும் அதனை புத்தக திருவிழாவாகவே மாற்றிக் காட்டினார்கள். கண்காட்சி நடந்த ஒவ்வொரு நாளும் திருவிழா போல் கூட்டம் அலைமோதியது. நிறைவு நாளான நேற்றும் புத்தக கண்காட்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது.

மாலை 6 மணியுடன் புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் பதிப்புத்துறையில் 50 ஆண்டுகள் சேவை செய்த அருணன், சுப்பையா, ராமநாதன் ஆகியோருக்கு விருது வழங்கினார். மேலும் 25 ஆண்டுகள் சேவை செய்து வருபவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வைரவன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ்.சீனிவாசன், துணை தலைவர்கள் பி.மயிலவேலன், ஏ.ஆர்.சிவராமன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புத்தக கண்காட்சியில் எவ்வளவு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது என்பது குறித்து பபாசி துணைத்தலைவர் மயிலவேலன் கூறியதாவது:-

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு வாசகர்கள் அதிக வரவேற்பு அளித்துள்ளனர். சுமார் 15 லட்சம் பேர் புத்தக கண்காட்சிக்கு வந்துள்ளனர். அவர்களில் 6 லட்சம் பேர் குழந்தைகள், மாணவர்கள் ஆவார்கள். சராசரியாக கண்காட்சியில் 13 லட்சம் புத்தகங்கள் விற்றுள்ளது. ரூ.15 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.10 கோடி அளவுக்கு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.5 கோடி கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புத்தக கண்காட்சி விற்பனையில் ரூ.2 லட்சம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வழங்கப்படும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. #chennaibookfair #tamilnews
Tags:    

Similar News