செய்திகள்

பொங்கல் விடுமுறை நாட்களில் கடந்த ஆண்டை விட சாலை விபத்துகள் எண்ணிக்கை குறைவு

Published On 2018-01-20 03:40 GMT   |   Update On 2018-01-20 03:40 GMT
கடந்த ஆண்டை விட பொங்கல் விடுமுறை நாட்களில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

நடந்து முடிந்த பொங்கல் விடுமுறையின் போது, தமிழகம் எங்கும் போலீசாரால் கடைபிடிக்கப்பட்ட, திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் துரித போக்குவரத்து சீர்படுத்துதல் வாயிலாக, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்து மரணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

போகிப்பண்டிகை, பொங்கல் தினம், திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் தினத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், பல்வேறு மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டில் (2017) 8 ஆயிரத்து 846 வழக்குகள் பதிவாகின. ஆனால் இந்த ஆண்டில் (2018) 27 ஆயிரத்து 896 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மேலும், தலைக்கவசம், ‘சீட் பெல்ட்’ அணியாமல் சென்றதாக 2017-ம் ஆண்டில் மேற்சொன்ன தினங்களில் 34 ஆயிரத்து 539 வழக்குகளும், 2018-ம் ஆண்டில் 75 ஆயிரத்து 771 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. போக்குவரத்து மட்டுமின்றி, சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பிலும் தமிழக காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட முறையான திட்டமிடல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் துரித செயல்பாடுகளால், 108 சாலை விபத்து சேவை அழைப்புகள் வெகுவாக குறைந்துள்ளது.

போகி பண்டிகை முதல் உழவர் தினம் வரை 2017-ம் ஆண்டில் 93 ஆயிரத்து 607 அழைப்புகளும், 2018-ம் ஆண்டில் 66 ஆயிரத்து 316 அழைப்புகளும் வந்துள்ளது. மேற்சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், 108 சேவை எண்ணில் பெறப்பட்ட சாலை விபத்து தொடர்பான அழைப்புகளின் எண்ணிக்கை, போகிப் பண்டிகை முதல் உழவர்தினம் வரை 2017-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 903 அழைப்புகளும், 2018-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 486 அழைப்புகளும் வந்துள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

2017-ம் ஆண்டு பொங்கல் விடுமுறை நாட்களில் தமிழகம் முழுவதும் 184 நபர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இந்த ஆண்டு பொங்கல் விடுமுறை நாட்களில் 159 நபர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட சுமார் 13.6 சதவீதம் சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News