செய்திகள்

உயிரிழப்பு, காயங்களுக்கான விபத்து காப்பீடு எவ்வளவு?: தமிழக அரசு அறிவிப்பு

Published On 2018-01-20 00:00 GMT   |   Update On 2018-01-20 00:00 GMT
உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கான விபத்து காப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
சென்னை:

சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் சிறந்த செயல்பாடுகளையும் மீறி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. விபத்து இழப்பீட்டினை சரியான நேரத்தில் வழங்க முடியாததால் கடந்த ஆண்டு ஜூலை 23-ந்தேதி வரையிலான தகவல் அடிப்படையில் 652 அரசு பஸ்கள் நீதிமன்ற பிணையில் உள்ளன.

மேலும், சுங்க கட்டணமாக மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.12 கோடியை அரசு போக்குவரத்துக்கழகங்கள் செலுத்துகின்றன. அண்டை மாநிலங்களில் காப்பீடு மற்றும் சுங்கவரி செலுத்தும் வகையில் பஸ் கட்டணங்களுடன் ஒரு பகுதியாக வசூலிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது காப்பீட்டுத் தொகை மற்றும் சுங்கவரி பயண கட்டணத்துடன் வசூலிக்கப்படுவதில்லை.

எனவே விபத்து இழப்பீடு, விபத்து தடுப்பு மற்றும் சுங்க கட்டணத்துக்கான ஒருங்கிணைந்த நிதி ஒன்றை புதிதாக உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இந்த நிதியத்தின் கீழ் வரும் அனைத்து வருவாயும் தனித்தலைப்பின் கீழ் வைக்கப்படும். எனவே விபத்து இழப்பீடு, விபத்து தடுப்பு மற்றும் சுங்கக் கட்டணத்திற்கான ஒருங்கிணைந்த நிதியம் உருவாக்க தற்போது அரசு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியம், ‘விபத்து இழப்பீடு, விபத்து தவிர்த்தல் மற்றும் சுங்கக் கட்டண நிதியம்’ என அழைக்கப்படும். தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் இதுபோன்ற விபத்து இழப்பீடு, விபத்து தவிர்த்தல் மற்றும் சுங்கக் கட்டண நிதியம் உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. சாலை விபத்தைத் தவிர்க்கும் ஒரு பகுதியாக, அனைத்து அரசு அதிவிரைவு பஸ்களிலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி’ பொருத்தப்பட்டு அது செம்மையாக பராமரிக்கப்படும்.

கர்நாடக மாநிலத்தில் சுங்க வரிக்கென்று தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆனால், தமிழகத்தில் விபத்து காப்பீடு மற்றும் சுங்கவரிக்கென ஒருங்கிணைந்து கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.



அரசு போக்குவரத்துக்கழக பஸ்களால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு, பெரும் மற்றும் சிறு காயம் அடைபவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்படும். அதன்படி ஒரு வயது முதல் 15 வயது வரை ரூ.2½ லட்சமும், 16 வயது முதல் 60 வயது வரையில் ரூ.5 லட்சமும், 60 வயதுக்கு மேல் ரூ.2½ லட்சமும் உயிரிழப்புக்கான இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

சிறு காயங்களுக்கு ரூ.10 ஆயிரமும், 2 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அளவிலான காயங்களுக்கு ரூ.25 ஆயிரமும், தலைக்காயம் மற்றும் நிரந்தர உறுப்பு இழப்புக்கு ரூ.5 லட்சமும், பெரிய காயம் மற்றும் எலும்பு முறிவுக்கு (ஆஸ்பத்திரியில் 7 நாட்கள் வரை சிகிச்சை பெறும் அளவிலான) ரூ.2 லட்சமும், ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் வரை சிகிச்சை பெறும் அளவிலான எலும்பு முறிவுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்படுகின்றன.

எதிர்காலங்களில் எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றை உள்ளடக்கிய அளவீட்டு குறியீட்டின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளை கொண்ட குழுவினால் பஸ் கட்டணம் மாற்றியமைக்கப் படும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.
Tags:    

Similar News