செய்திகள்

ரூ.750 கோடி கொடுப்பதில் பலன் இல்லை: பஸ் ஸ்டிரைக் நீடிக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Published On 2018-01-10 07:48 GMT   |   Update On 2018-01-10 07:48 GMT
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்குவதில் பலன் இல்லை எனவும் பஸ் வேலை நிறுத்தம் நீடிக்கும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. #BusStrike #TNAssembly
சென்னை:

பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.750 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.

இதனை ஏற்று பணிக்கு திரும்பும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதனை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பஸ் ஸ்டிரைக் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பிற துறையில் உள்ளவர்களுக்கு இணையாக சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

மின்சார வாரியம், ஆவின் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2.57 காரணியை கொண்டு பெருக்கி வரும் தொகை அடிப்படை சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த பெருக்கத்தின் காரணியில் 13 குறைவாக 2.44 ஆக பெருக்கி வரும் தொகையை தராமல் கிடைக்கும் என்று கூறியதால்தான் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.


இந்த வேறுபாடுகள் மிகவும் குறைவானது. இதை சரி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தோம். ஆனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து இதுவரையில் வழங்காமல் இருந்ததால் நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததின் பேரில் ரூ.1,700 கோடி வழங்க வேண்டிய இடத்தில் வெறும் ரூ.750 கோடி மட்டும் வழங்குவதாக செய்தி வெளியாகி உள்ளது.

அதுவும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கி விட்டு பணியில் இருப்பவர்களுக்கு வழங்காமல் இருப்பது முதல்வரின் அறியாமையை காட்டுகிறது. அதனால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் தொடரும்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. ஊதிய மாற்று காரணி குறித்து எதுவும் கூறாமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்து இருப்பது ஏமாற்று வேலையாகும்.

இதனை ஏற்க இயலாது. எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

எச்.எம்.எஸ். தொழிற்சங்க சுப்பிரமணியம் கூறுகையில், நிலுவை தொகை எங்களுக்கு வர வேண்டியதுதான். அது பிரச்சனை இல்லை. 2.57 மாற்று காரணி சம்பள உயர்வு வழங்க வேண்டும். 2003-ல் பணியில் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி வழங்கப்படவில்லை. இதனை கொடுக்க வேண்டும். அதுவரையில் போராட்டம் தொடரும் என்றார். #TamilNews #BusStrike #TNAssembly
Tags:    

Similar News