செய்திகள்

ஆக்கிரமிப்புகள் இல்லாத கூவம் கரையோரம் வீடுகளை அகற்ற கூடாது: தமிழிசை பேட்டி

Published On 2017-12-23 09:09 GMT   |   Update On 2017-12-23 09:09 GMT
ஆக்கிரமிப்புகள் இல்லாத கூவம் கரையோரம் வீடுகளை அகற்ற கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பூந்தமல்லி:

சென்னையில் கூவம் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை பொதுப்பணித்துறை அகற்றி வருகிறார்கள்.

இதற்கிடையே திருவேற்காடு பெருமாள் கோவில் தெருவில் கூவம் கரையோரம் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு வசிப்பவர்கள் தாங்கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும், தங்களுக்கு பட்டா உள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருவேற்காடு பெருமாள் கோவில் தெருவில் உள்ள கூவம் கரையோர வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு வசிப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அவரிடம் பொது மக்கள் மனு கொடுத்தனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கு கடந்த பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சென்னையில் நீர்நிலைகளில் 85 சதவீதம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் உள்ளவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர்.

ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சாதாரண மக்கள் வசிக்கும் வீடுகள் இடிக்கப்படுகின்றன. இங்கு வசிப்பவர்கள் பட்டா வைத்திருக்கிறார்கள்.

வாக்காளர் அடையாள அட்டை பெற்று ஓட்டும் போட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற வீடுகளை இடிப்பதை நிறுத்த வேண்டும். மக்களோடு நாங்களும் நின்று போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் ஊர் தலைவர்கள் திருவேற்காடு ரமேஷ், அருண கிரி, சுந்தர், ஜெய்சங்கர் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News