செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்கிறது: தலைவர்கள் முற்றுகை

Published On 2017-12-08 08:06 GMT   |   Update On 2017-12-08 08:07 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் அணி, பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் என 59 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன.

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வீதி வீதியாக பிரசாரம் செய்தனர்.

இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புதுவண்ணாரப் பேட்டை வ.உ.சி. நகரில் உள்ள மசூதியில் பொதுமக்களிடம் வாக்குசேகரிக்கின்றனர்.

டி.டி.வி.தினகரன் தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள மசூதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வீதி வீதியாக பிரசாரம் செய்கிறார்.

கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரத்தை தொடங்கினார். கோபால்ரெட்டி நகர், அண்ணாநகர், மூப்பனார் நகர் பகுதிகளில் அவர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

தி.மு.க. சார்பில் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெரு - வ.உ.சி. நகர் சந்திப்பில் வருகிற 11-ந்தேதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள்.
Tags:    

Similar News