செய்திகள்

அரக்கோணம் அருகே கோஷ்டி மோதல்: பைக்குகள் எரிப்பு - 21 பேர் கைது

Published On 2017-11-20 10:17 GMT   |   Update On 2017-11-20 10:17 GMT
அரக்கோணம் அருகே இரு பிரிவினர் மோதலில் பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள வளர்புரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உள்ள பானிபூரி கடையில் நேற்று இரவு அதே பகுதியில் வசிக்கும் இரு பிரிவை சேர்ந்த வாலிபர்கள் பானிபூரி சாப்பிட்டனர்.

அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவை சேர்ந்த 3 வாலிபர்கள் சரமாரியாக தாக்கப்பட்டனர். இதில் அவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, இருபிரிவினரும் அங்கு திரண்டு பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

2 பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும், அந்த வழியாக சத்துணவு கூடத்திற்கு முட்டைகளை ஏற்றிச் சென்ற மினி வேனும் மடக்கப்பட்டது. அந்த வேனுக்கும் தீ வைக்க முயற்சி செய்தனர்.

தகவலறிந்ததும், டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்து முட்டை வேனை மீட்டனர்.

நள்ளிரவு 12.30 மணிவரை பதட்டம் நிலவியது. சம்பவ இடத்திற்கு எஸ்.பி. பகலவன் நள்ளிரவு வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக, அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து இருபிரிவையும் சேர்ந்த 21 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து மோதல் ஏற்படும் நிலை இருப்பதால் ஆஞ்சநேயர் கோவில் தெரு, பள்ளி கூட பகுதி, பஸ் நிறுத்தத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News