செய்திகள்

குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 11-ல் நடைபெறும்

Published On 2017-11-14 10:02 GMT   |   Update On 2017-11-14 10:03 GMT
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் சார்பில் நடைபெறும் குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக  கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துதேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

செலவை குறைக்கும் வகையில் இரண்டு தேர்வையும் ஒன்றாக இணைந்து சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான சிசிஎஸ்இ-4 தேர்வுகள் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வுகளுக்காக விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13-ம் தேதியாகும். டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை, கட்டண சலுகை, கல்வித்தகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 9000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News