செய்திகள்
இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீடு

சசிகலா - உறவினர்களின் ‘பினாமி’ சொத்து ஆவணங்கள் சிக்கியது

Published On 2017-11-13 06:44 GMT   |   Update On 2017-11-13 06:44 GMT
சசிகலா, தினகரன், விவேக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வீட்டு கார் டிரைவர்கள், வேலைக்காரர்கள் பெயர்களில் உள்ள பினாமி சொத்துக்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறையினர் தயாரித்து வருகின்றனர்.
சென்னை:

சசிகலா, தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், கட்சி ஆதரவாளர்கள் என்று பலரது வீடுகளில் கடந்த 9-ந்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சுமார் 1800 பேர் களம் இறக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த சோதனை இன்று (திங்கட்கிழமை) 5-வது நாளாக நீடிக்கிறது.

9-ந்தேதி சோதனை தொடங்கியபோது முதலில் 187 இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடந்தது. பிறகு ஒவ்வொரு இடமாக சோதனை முடிந்தது. சில இடங்களில் மட்டும் அறைகள் “சீல்” வைக்கப்பட்டுள்ளன.

நேற்று வருமானவரி சோதனை நடைபெறும் இடங்கள் எண்ணிக்கை 37 இடங்களாக குறைந்தது. 5-வது நாளான இன்று 20 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்றுடன் பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 4 நாட்கள் சோதனையில் ஆயிரக்கணக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அந்த ஆவணங்கள் மூலம் சசிகலா, தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள் போலி பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி நூற்றுக்கணக்கான வங்கி கணக்குகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுமார் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையைத் தொடர வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே சில ஆவணங்கள் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதிலும் தில்லுமுல்லு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள 50 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.



அந்த 50 நாட்களில் சசிகலா, தினகரன் குடும்பத்தினர் உறவினர்கள் சுமார் ரூ.280 கோடிக்கு பழைய நோட்டுகளை கொடுத்து விட்டு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதில் புதுச்சேரியில் உள்ள நகைக் கடை மூலம் மட்டும் ரூ.168 கோடிக்கு புதிய இரண்டாயிரம் நோட்டுகளை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நடந்த சோதனையில் மேலும் சில அதிர்ச்சிகரமான சொத்து குவிப்புகள் நடந்து இருப்பதை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தனர். முதல் மூன்று நாட்கள் சோதனையில் சசிகலா, தினகரன் குடும்பத்தினருக்கு ரூ.1200 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டது.

நேற்று கிடைத்த பல ஆவணங்கள் சசிகலா குடும்பத்தினர் “பினாமி பெயர்”களிலும் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதை காட்டி விட்டது. இதுபற்றி வருமானவரித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

“ஆபரே‌ஷன் கிளீன் மணி” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சோதனை முதலில் தென் மாநிலங்கள் முழுக்க நடத்தப்பட்டது. தற்போது இந்த சோதனை சென்னை, கோவை ஆகிய 2 மண்டலங்களில் மட்டும் நடந்து வருகிறது.

இதுவரை எங்களுக்கு கிடைத்துள்ள ஆவணங்களில் பெரும்பாலானவை அசையா சொத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த சொத்துக்களில் கணிசமானவை பினாமிகள் பெயர்களில் உள்ளன.

சசிகலா, தினகரன், விவேக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வீட்டு கார் டிரைவர்கள், வேலைக்காரர்கள் பெயர்களில் இந்த சொத்துக்கள் உள்ளன. அவர்களது நண்பர்கள் பெயரிலும் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது.

சில சொத்துக்கள் தொழில் பங்குதாரர்களின் பெயர்களில் இருக்கிறது. இந்த பினாமி சொத்துக்கள் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளிலும் இவர்களுக்கு சொத்துக்கள் இருப்பதாக சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக தேவைப்பட்டால் அன்னிய வரி ஆய்வுத் துறை அதிகாரிகள் உதவியுடன் விசாரணை நடத்தப்படும். வெளிநாடுகளில் சொத்து இருப்பது உறுதியானால் கருப்பு பண சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்கள் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. இது பற்றிய தகவல்களை விரைவில் வெளியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இதுவரை கிடைத்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் பார்த்தால் பினாமி சொத்துக்கள் பலரது பெயர்களில் உள்ளன. அவர்களிடம் முதல் கட்ட விசாரணையே நடத்தப்பட்டுள்ளது.

மீண்டும் அவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த உள்ளோம். அப்போது அந்த பினாமிகளிடம் “இவ்வளவு சொத்துக்கள் வாங்க, கோடிக்கணக்கான ரூபாய் உங்களுக்கு எப்படி வந்தது?” என்று கேட்கப்படும்.

அந்த பணத்துக்கான வருவாய் பற்றி கேள்விகள் கேட்கப்படும். அதன்பிறகு சொத்துக்குவிப்புக்கு உடந்தையாக இருந்ததாக பினாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பினாமி பரிவர்த்தனை (தடை) திருத்த சட்டம்-2016ன் கீழ் இந்த நடவடிக்கைகள் பாயும்.

சில வங்கி கணக்குகள் பினாமிகள் பெயர்களில் இருக்கிறது. தேவைப்பட்டால் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்படும். நாங்கள் நடத்தி வரும் சோதனைக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சசிகலா, தினகரன், குடும்பத்தினர், உறவினர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது பற்றி கடந்த சில மாதங்களாக நாங்கள் ஆய்வு செய்து வந்தோம். பல்வேறு கோணங்களில் நாங்கள் விசாரணை நடத்தினோம்.

அந்த விசாரணைகளில் முறைகேடுகள் பற்றி உறுதியானது. அதன்பிறகே நாங்கள் மிகவும் திட்டமிட்டு இந்த சோதனையில் இறங்கினோம். சமீபகாலங்களில் நாங்கள் நடத்திய சோதனைகளில் இதுதான் மிகப்பெரிய சோதனையாகும்.

பினாமிகள் பெயர்களில் உள்ள சொத்துக்கள் பற்றிய ஆவணங்களில் பெரும்பாலானவை எங்களுக்கு தி.நகரில் நடத்தப்பட்ட சோதனையில்தான் கிடைத்தது. இந்த பினாமி சொத்துக்களின் சந்தை விலையே பல நூறு கோடிகளைத் தாண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப் பணம் பற்றி தனிக்குழு ஒன்று விசாரணை நடத்தி வருகிறது. அதிலும் முறைகேடுகள் இருப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இனி சட்டம் தன் கடமையை செய்யும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Tags:    

Similar News