செய்திகள்

பந்தநல்லூரில் வாலிபரை வழிமறித்து தாக்கி கார் கடத்தல்: 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2017-11-10 17:18 GMT   |   Update On 2017-11-10 17:18 GMT
பந்தநல்லூரில் வாலிபரை வழிமறித்து தாக்கி காரை கடத்தி சென்ற சம்பவம் கும்பகோணத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே திருவாவடுதுறையை சேர்ந்தவர் முகமதுபகர்(வயது25). இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். இவர் நேற்று தனது காரில் ஆடுதுறை வந்தார். அங்குள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு கிளம்பினார்.

பந்தநல்லூரில் உள்ள தனது உறவினர் ஒருவர் வெளிநாடு செல்வதால் அவரை பார்க்க சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது காரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர்.

குணதலபாடி அருகே கார் சென்றபோது மர்ம நபர்கள் 3 பேரும் திடீரென காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் முகமதுபகரை கடுமையாக தாக்கி கீழே தள்ளினர். இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள அவரது காரை ஒருவர் ஓட்டிக் கொண்டு கடத்தி சென்று விட்டார். மற்றவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து முகமது பகர் பந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்தி சென்ற 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

இதேபோல் கும்பகோணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வாடகைக்கு காரை டிரைவருடன் 3 பேர் அழைத்து சென்று கடலூரில் கொலை செய்தனர்.

இந்நிலையில் மற்றொரு கார் கடத்தல் சம்பவம் கும்பகோணத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News