செய்திகள்

நள்ளிரவில் 3 ரெயில்களில் கொள்ளை: ரூ.24 ஆயிரம் பறித்த திருநங்கைகள்

Published On 2017-11-07 10:57 GMT   |   Update On 2017-11-07 10:57 GMT
ஜோலார்பேட்டை அருகே நள்ளிரவில் 3 ரெயில்களில் செல்போன் உள்பட ரூ.24 ஆயிரம் பணம் பறித்த திருநங்கைகள் ரெயில் இருந்து குதித்து தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலர்பேட்டை:

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா என்ற இடத்தில் நேற்று இரவு 12.30 மணிக்கு வந்தது. அப்போது சிக்னல் காரணமாக ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

இதனை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ரெயில் பயணி வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு குதித்து தப்பி சென்றுவிட்டார்.

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து செல்லும் ஆழப்புலா எக்ஸ்பிரஸ் பக்கிரிதக்கா சிக்னலில் மெதுவாக சென்றது. இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர் பெண் பயணி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை பறித்து ரெயிலில் இருந்து குதித்து தப்பி சென்றுவிட்டார்.

இது பற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்து விட்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவங்கள் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் மேலும் ஒரு திடுக்கிடும் பணம் பறிப்பு நடந்தது. யஷ்வந்த்பூரில் இருந்து ஹர்ட்டியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுபெட்டியில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.

அப்போது வடமாநில வாலிபர் ஒருவரிடம் அத்துமீறி பர்சை பிடுங்கினர். அதில் ரூ.24 ஆயிரம் பணம் இருந்தது. இதனைக்கண்ட திருநங்கைகள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். ரெயில் நின்றதும் குதித்து தப்பி ஒடிவிட்டனர்.

இந்த சம்பவத்தால் ரெயில் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது. காட்பாடி வந்ததும் இது குறித்து ரெயில்வே போலீசில் வடமாநில வாலிபர் புகார் கூறினார்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் அளிக்குமாறு போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.

ஒரே நாளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் ரெயில் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, காட்பாடி இடைபட்ட பகுதிகளில் ரெயிலில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் கட்பாடி அருகே திருப்பதி சென்ற ரெயிலில் சென்னை பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதுபோல் நடந்த சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யபடவில்லை.

ரெயில் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தினர்.
Tags:    

Similar News