செய்திகள்

கவர்னர் கிரண்பேடியை மாற்ற கோரி நாளை உண்ணாவிரத போராட்டம்: தலித் கூட்டமைப்பு அறிவிப்பு

Published On 2017-10-10 10:20 GMT   |   Update On 2017-10-10 10:20 GMT
கவர்னர் கிரண்பேடியை மாற்ற கோரி புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு, நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக தலித் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

புதுவை காங்கிரஸ் அரசையும், அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னருகே முழு அதிகாரம் என கிரண் பேடி அரசின் அலுவல்களில் தலையிட்டு வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு அரசின் அன்றாட அலுவல்களில் தலையிட கவர்னருக்கு உரிமையில்லை என கூறி வருகின்றனர்.

கவர்னர், அமைச்சர் இடையிலான மோதல் அவ்வப்போது உச்சக்கட்டத்தை எட்டுவதும் மீண்டும் அமைதியாவதும் கடந்த ஓராண்டாகவே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கிரண்பேடியை மாற்ற கோரி பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து சமூக நலத்துறையில் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ.யில் புகார் செய்ய உள்ளதாகவும், அதற்கு முன்பு தனது மகனுடன் வந்து தன்னை சந்திக்க வருமாறு கவர்னர் அமைச்சர் கந்தசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்க மறுத்த அமைச்சர் கந்தசாமி தடைபட்டுள்ள சமூகநல திட்டங்களுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே கவர்னரை சந்திப்பேன் என்று பதில் கூறினார். இதனால் மீண்டும் கவர்னர், அமைச்சர் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனால் கவர்னரை மாற்ற வேண்டும் என கோ‌ஷம் மீண்டும் எழத் தொடங்கி உள்ளது. தலித் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நீலகங்காதரன் கவர்னரை மாற்ற கோரி நாளை (புதன் கிழமை) தலைமை தபால் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில், ஆதி திராவிடர் நலத்திட்டங்கள் அனைத்தையும், கவர்னர் கிரண்பேடி முடக்கி வைக்கிறார். மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை தடுத்து விட்டார். இலவச மனை, வீடு கட்டும் திட்டத்திற்கு பணம் கொடுக்க மறுக்கிறார்.

நிதித்துறை செயலாளரை நேரில் அழைத்து, ஆதி திராவிடர் துறைக்கான எந்த கையெழுத்தையும் போடக் கூடாது என கூறியுள்ளார். பொதுப் பணித்துறை அதிகாரிகளையும் செயல்பட விடுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 23 திட்டங்களை கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார்.

எனவே தலித் நலனுக்கான அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து, கவர்னர் கிரண்பேடியை மாற்ற கோரி, புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு, நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இப்போராட்டத்திற்கு, அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். கவர்னருக்கு எதிராக அமைச்சர் கந்தசாமி டெல்லியில் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்களும் பங்கேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News