செய்திகள்

வாய்க்கு வந்த படி பேசும் கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது: கடம்பூர் ராஜூ பேட்டி

Published On 2017-08-19 17:19 GMT   |   Update On 2017-08-19 17:19 GMT
வாய்க்கு வந்த படி பேசும் கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் ஆதிசங்கரர் வழிபட்ட ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை திருச்சியில் இருந்து சிறுவாச்சூருக்கு மதுரகாளிஅம்மனை தரிசனம் செய்வதற்காக வந்தார்.

தரிசனம் செய்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் விரைவில் இரு அணிகள் இணைப்பு விழா நடைபெற உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று தான் முதல்-அமைச்சர் புரட்சித் தலைவியின் மறைவு தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கே.பி.முனுசாமி கூறுவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர். அவருக்கு அரசியல் தெரியாது. அரசியல் குறித்து தேவையற்ற கருத்துகளை கூறி நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார்.

ஆளும் தமிழ்நாடு அரசை பெரும்பான்மையான அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொண்டுள்ளனர். இந்த தருணத்தில் நாங்கள் ஏன் விலக வேண்டும்.

இப்போது கமல்ஹாசன் கேட்கும் கேள்விகளை அன்றைக்கு மைனாரிட்டி தி.மு.க. அரசை பார்த்து கேட்டிருந்தால் நியாயம். பிற அரசியல் கட்சிகள் எதுவும் சொல்லவில்லை என அவரே சொல்லி இருக்கிறார். சொல்லவும் மாட்டார்கள். அவர்களுக்கு அரசியல் தெரியும், அவருக்கு (கமல்ஹாசன்) அரசியல் தெரியாது. அவர் வாய்க்கு வந்த படி பேசுகிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிரிந்துள்ள அணிகள் மீண்டும் இணையும். இரட்டை இலை சின்னத்தை நமதாக்குவோம். மீண்டும் 2021-ல் அம்மாவின் ஆட்சி மலரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News