செய்திகள்

திருச்சியில் வருகிற 20-ந்தேதி ரஜினியின் அரசியல் முன்னோட்ட மாநாடு: தமிழருவி மணியன் ஏற்பாடு

Published On 2017-08-17 09:21 GMT   |   Update On 2017-08-17 09:21 GMT
ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்கு காந்திய மக்கள் இயக்கம் வருகிற 20-ந்தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருப்பதாக தமிழருவி மணியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசியல் அமைப்பு முறையை முற்றாக அழுகும் நிலைக்கு மாற்றிவிட்ட தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்த இந்த இரண்டு திராவிடக் கட்சிகளால், ஊழல், பொது வாழ்வின் தவிர்க்க முடியாத தீமையாகத் திசையெங்கும் வியாபித்துவிட்டது.

இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி அமைச்சரவை உள்கட்சிக் குழப்பங்களால் கோட்டையிலிருந்து வெளித்தள்ளப்படுவதற்கான நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு கணமும் தமிழக நலனுக்கு எதிரானது என்ற உணர்வு மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி முறையைப் பார்த்துப் பார்த்து மனம் சலித்துக் கிடக்கும் மக்கள் அரசியல் அரங்கில் நல்ல மாற்றம் ஒன்று நிகழாதா? நம்மை ரட்சிக்கும் ஒரு நல்ல தலைமை வந்து வாய்க்காதா? என்று ஏங்கித் தவமிருக்கிறார்கள்.

இதுபோன்ற சூழலில் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து ஊழலின் ஆணி வேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டிருக்கிறார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்? அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழக் கூடுமா? அவரால் மக்கள் எதிர்பார்க்கும் நல்ல அரசியல் எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தர வேண்டியுள்ளது.

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்கு காந்திய மக்கள் இயக்கம் வருகிற 20-ந்தேதி திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருக்கிறது.

காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும், ரஜினியை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நெஞ்சங்களும், ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அறிவார்ந்த பொது மக்களும் திரளாகக் கூடவிருக்கும் இந்த மாநாட்டின் முடிவிலிருந்து எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்க இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News