செய்திகள்

தமிழகம்-புதுச்சேரியில் வருமான வரி சோதனையில் ரூ.1429 கோடி கருப்பு பணம் சிக்கியது

Published On 2017-07-25 06:27 GMT   |   Update On 2017-07-25 06:27 GMT
தமிழகம் - புதுவையில் வருமான வரி சோதனையில் ரூ.1,429 கோடி கருப்பு பணம் சிக்கியதாக வருமான வரி புலனாய்வு இயக்குனர் ஜெனரல் முரளிகுமார் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை வருமான வரி அலுவலகத்தில் 157-வது வருமான வரி தினம் கொண்டாடப்பட்டது. இதில் வருமான வரி புலனாய்வு இயக்குனர் ஜெனரல் முரளிகுமார் பேசுகையில் கூறியதாவது:-

2016-17-ம் ஆண்டில் வருமான வரி தொடர்பாக 100 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.3,210 கோடி பணத்தை கண்டுபிடித்து மீட்டோம். தற்போது கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் மட்டும் ரூ.1,429 கோடிக்கு கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் சிக்கியதில் 50 சதவீதத்தை 3 மாதத்தில் நெருங்கி விட்டது.

2016 மே மாதத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது 42 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 2015-16-ல் மொத்தம் 18 சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.428 கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டது.

தற்போது தகவல் தொடர்பு சாதனங்கள் மேம்பட்டு உள்ளது. இதனால் நல்ல தகவல்கள் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை வெற்றிகரமாக மீட்டு வருகிறோம்.

இதில் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருமான வரித்துறை கமி‌ஷனர் பழனிவேல்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு நாடு முழுவதும் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டு ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு ரூ.60 ஆயிரத்து 606 கோடி வரி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.71 ஆயிரத்து 409 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மக்களுக்கும், வணிகர்களுக்கும் முழுமையான பலன் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News